தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக மதிவாணன் நியமனம் – முதல்வர் அறிவிப்பு!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக திரு. உ.மதிவாணன் அவர்களை நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 1974 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது. தாட்கோவின் கட்டுமானப் பிரிவினால் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், மேம்பாட்டுப் பிரிவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக திரு. உ. மதிவாணன் அவர்களை நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17-1-2022) ஆணையிட்டுள்ளார்கள். திரு. உ. மதிவாணன் அவர்கள் பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஆவார். 1996 முதல் 2001 வரை திருவாரூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், 2006 முதல் 2011 வரை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழக பால்வளத் துறை அமைச்சராகவும் பணிபுரிந்த நீண்ட அனுபவம் கொண்டவர் ஆவார். மேலும், கடந்த 2016 முதல் 2021 வரை கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருவாரூர் மற்றும் கீழ்வேளுர் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.