அண்ணாமலைக்கு எதிரான கருத்து: ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டினின் மகன் சரமாரி குற்றச்சாட்டு.!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த ஆதவ்வின் விமர்சனத்திற்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மிகவும் காட்டத்துடன் திமுக குறித்தும் பாஜக குறித்தும் நேரடியாக தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்து பேசியிருந்தார். அண்ணாமலை குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, ”டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள்.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சி செய்கிறார். இதெல்லாம் என்ன அரசியல்? என்னை பொறுத்தவரையில் திமுக அண்ணாமலையை செட் செய்துள்ளது. புலியை ஆடு சீண்டுவது போல அண்ணாமலை எங்களை சீண்டி வருகிறார்.
இனிவரும் காலங்களில் எங்களது தலைவரை தொட்டால் மக்கள் மத்தியில் உங்களை அம்பலப்படுத்துவோம். முதலில், அண்ணாமலை மோடிக்கு உண்மையாக இருக்கவேண்டும். பெண்களை கேவலமாக பேசக் கூடியவரை பாஜக மாநில தலைவராக வைத்திருக்கிறது” எனவும் ஆதவ் அர்ஜுனா காட்டத்துடன் பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “என் மாமனார் காசுல நான் வாழல, லாட்டரி வித்துக்கிட்டு சுத்தல, சொந்தமா உழைச்சு உங்க முன்னாடி நிக்கிறேன்” என்று ஆதவ் அர்ஜுனாவை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார். இந்நிலையில், மார்ட்டினின் மகனான ஜோஸ் சார்லஸ் என்பவர் அண்ணாமலை குறித்த ஆதவ்வின் விமர்சனத்திற்கு சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது சமூக வலைத்தள பதிவில்,” என் தந்தையின் பணத்தை தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டே, எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ஆதவ் அர்ஜுனா பேசிய வார்த்தைகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கிருக்கும் பதவி, பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள, பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைத்துக்கொண்டு பல கட்சிகளில் இணைந்து வருகிறார்.
ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆதவ் அர்ஜூனா குறித்த, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சை வரவேற்கிறேன். ஆதவ் பேச்சால் எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்”என்று தெரிவித்துள்ளார்.
I state my objection and apology against Arjun adhava’s unparliamentary statement against Tamil Nadu BJP president Thiru k Annamalai who is tirelessly working towards welfare of the people of Tamil Nadu. I also support his statement that “ he is misusing his father in laws money…
— Jose Charles Martin (@sscharles) March 31, 2025