இனி திருமணச் சான்றிதழ்களை இணையவழியில் திருத்தம் செய்யலாம்! புதிய வசதி அறிமுகம்!
திருமணச் சான்றிதழ்களை இணையவழி திருத்தம் செய்யும் வசதியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
சென்னை தலைமை செயலகத்தில் திருமணச் சான்றிதழ்களை இணையவழி திருத்தம் செய்யும் வசதியை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இனி திருமணச் சான்றிதழ்களை இணையவழியில் திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து திருமணச் சட்டம் 1955, தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009, சிறப்புத் திருமணச் சட்டம், 1954, இந்திய கிறித்துவ திருமணச் சட்டம், 1874 ஆகிய திருமணப் பதிவுச் சட்டங்களின் கீழ் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
திருமண பதிவிற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கொடுக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் திருமண சான்று வழங்கப்படுகிறது. ஆனால் பின்னாளில் கடவுச்சீட்டு (Passport) மற்றும் வெளிநாடு செல்ல விசா கோரி விண்ணப்பிக்கும்போது சில சமயங்களில் பெயர்களில் ஏற்படும் பிழைகள், முகவரி போன்றவற்றில் திருத்தம் தேவைப்படுகிறது. அவ்வாறு திருத்தம் செய்திட https://tnreginet.gov.in என்ற இணையவழி விண்ணப்பித்து திருத்தப்பட்ட திருமண பதிவுச் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் விரும்பிய நேரத்தில் எவ்விடத்திலும் இணையவழி விண்ணப்பம் செய்யலாம். உரிய திருத்தம் செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ் பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் பயனாளிக்கு இணையவழி அனுப்பப்படும். பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் கூடிய அச்சான்றிதழை விண்ணப்பதாரர் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.