விமான சாகச நிகழ்ச்சி., 5 பேர் உயிரிழப்பு., 7 பேர் சிகிச்சை நிலவரம் என்ன.? அமைச்சர் விளக்கம்!.!
சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களின் 5 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த உயிரிழப்புகள் பற்றியும், சென்னை மெரினாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், “விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கானோர் வருவார்கள் என விமானப்படை தெரித்து இருந்தது. அவர்கள் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என எங்களிடம் (தமிழக அரசிடம்) கூறினர்.
அதன்படி , சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை , கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சுமார் 4,500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. 1000 மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்தோம் . அதேபோல 15 லட்சம் பேரும் வந்தார்கள்.
நேற்று, விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனால் தான் விமானப்படை முன்னதாவே, விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வருவோர், குடை, தண்ணீர் பாட்டில், கண்ணாடி, தொப்பி போன்றவற்றை கொண்டுவரும் படி கேட்டுக்கொண்டனர். வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என நாங்கள் யாரும் கூறவில்லை. தெளிவாக சொல்லித்தான் விமானப்படையினர் அழைத்துள்ளனர்.
இது தேசிய அளவில் பார்க்கப்பட வேண்டிய விழா, விமானப்படை கட்டமைப்பை உலகிற்கு எடுத்துகாட்ட வேண்டிய நிகழ்வு, இப்படியான நிகழ்வில் இந்த உயிரிழப்புகள் உண்மையில் வருந்தத்தக்க ஒன்றுதான். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. அரசியல் செய்ய நினைத்தால் அவர்கள் தான் தோற்றுப்போவார்கள்.
யாரும் மருத்துவமனைக்கு வந்து அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவில்லை. இறந்த பிறகு தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 43 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில் 40 பேர் வெளிநோயாளியாக அனுப்பிவைக்கப்ட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் உல் நோயாளிகளாக உள்ளனர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் , 49 பேர் அனுமதிக்கப்பட்டு 46 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் உள்நோயாளியாக உள்ளார் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேர் சேர்க்கப்பட்டனர். அதில் 7 பேர் வீடு திரும்பியுள்ளனர். 2 உயிரிழப்புகள் அங்கு பதிவாகியுயள்ளது.
மொத்தமாக 102 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 93 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை முடிந்து வெளியேறிவிட்டனர். 7 பேர் இன்னும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கூட்டநெரிசலில் ஒருவருக்கு கால் முறிவு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு வலிப்பு பிரச்சனை, ஒருவருக்கு குடலிறக்கம், ராயப்பேட்டை மருத்வமனையில் ஒருவற்கு உணவு ஒவ்வாமை உள்ளிட்ட உடல் பிரச்சனைகளால் சிகிச்சை பெற்று வருகின்றனர். ” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.