வாழை : வீட்டுக்கே சென்ற திருமாவளவன்.. விருந்தளித்த மாரி செல்வராஜ்.!
சென்னை : வாழை படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டுக்கே நேரில் சென்று வாழ்த்தினார் தொல். திருமாவளவன்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘வாழை’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது. முக்கிய பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் இப்படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் விடாத குறையாக புகழ்ந்து, தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.
அந்த வரிசையில், திருமாவளவன் வாழை படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டுக்கே நேரிலே சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வருகை தந்த விசிக தலைவர் தொல். திருமாவளவனை அழைத்து விருந்து வைத்து சிறப்பாக கவனித்துள்ளார் மாரி செல்வராஜ்.
மேலும் இந்த படம் குறித்து தொல். திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ” ‘வாழை’ கண்ணீரில் கருக்கொண்ட காவியம். கலையுலகே புருவம் உயர்த்தும் கலைநயம். உழைக்கும் மக்களுக்கு வாழைக்குலைகள் மட்டுமல்ல வாழ்க்கையே பெருஞ்சுமை.
புளியங்குளத்தில் முளைவிட்ட பொதுவுடைமை அரசியலின் தாக்கத்தால் மாரியின் வேர்களில் மார்க்சியம். போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும் பொருளியல் முரண் விளக்கும் புரட்சிகரப் படைப்பு! இது மாரியின் மழலைப்பருவ வரலாறு எனினும் ஒரு சமூகத்தின் உயிர்வலி ” என்று பாராட்டியுள்ளார்.
தற்போது, பாராட்டு மழையிலும், முத்த மழையிலும் நினைந்திருக்கும் மாரி செல்வராஜ், பார்வையாளர்களை அழ வைத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். ஆம், அந்த அளவுக்கு படத்தின் காட்சிகள் அமைந்திருக்கிறது. தன்னுடைய சிறிய வயதில் நடந்த உண்மை சம்பவத்தை, செண்டிமெண்ட் கலந்து எமோஷனலான காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.