ஆதரவாளர்களை பன்னை வீட்டில் சந்தித்துவரும் ஓ.பி.ஸ்.. தர்மயுத்தம் 2.o தொடக்கமா?

Default Image

தேனி பெரியகுளம் பண்ணை வீட்டில் உள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஓபிஎஸ் அடுத்தடுத்து ஆதரவாளர்களை சந்தித்து வருவது மீண்டும் ஒரு தர்மயுத்தத்திற்கு தயாராகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது.இந்நிலையில்,  நாளை மறுநாள் (அக்டோபர் 7ஆம் நாள் ) முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணைவீட்டில் 3 நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தங்கியுள்ளார். அவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆதரவாளர்கள் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்து செல்கின்றனர். அதேநேரம், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தொடர்ச்சியாக ஓபிஎஸ்சை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களின் துணையுடன் மீண்டும் ஒரு தர்மயுத்தத்தை தொடங்குவாரா அல்லது எடப்பாடியுடன் சமரசமாக செல்வாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் தீவிரமாக எழுந்துள்ளது. இதனிடையே, இன்று காலை தேனி மாவட்டம் நாகலாபுரத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் ஓபிஎஸ் கலந்து கொள்ள உள்ளார். தற்போதைக்கு சென்னை செல்லமாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலியயில், உசிலம்பட்டியில் கள்ளர் கல்வி தந்தை மூக்கையா தேவர் சிலை அமைப்பது தொடர்பாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார் நேற்று ஆய்வு செய்தனர். உசிலம்பட்டியில் தேவர் சிலை அருகில், ரூ.17 லட்சத்தில் மூக்கையா தேவருக்கு, வெண்கல சிலை நிறுவப்படவுள்ளது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை சிலை நிறுவப்பட உள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அமைச்சர் உதயகுமார், தேனி எம்பி ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி ஆகியோர் உடனிருந்தனர். நிருபர்கள் பேட்டி கேட்டதற்கு, சிரித்தபடியே வாங்க டீ சாப்பிடுவோம் எனக்கூறி தேவர் சிலை எதிரே உள்ள டீக்கடைக்கு சென்று டீ சாப்பிட்டார் ஓ.பன்னீர்செல்வம். பின்னர், தேனிக்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிகழ்ச்சியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்