ஃபார்முலா 4 கார் பந்தயம்.! பாராட்டு மழையில் அமைச்சர் உதயநிதி.!
ஃபார்முலா 4 கார் பந்தயம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரு தினங்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததை அடுத்து அமைச்சர் உதயநிதிக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை : ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னை தீவுத்திடலில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31) மற்றும் நேற்று (செப்டம்பர் 1) ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்வு கடந்தாண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது டிசம்பர் மாத கனமழை காரணமாக போட்டிகள் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டது.
பின்னர், ஒருவழியாக ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த போட்டிக்கான உரிய FIA (பன்னாட்டு மோட்டார்சைக்கிள் கூட்டமைப்பு) பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கவில்லை என்ற சிக்கல் எழுந்தது.
சனிக்கிழமலை மதியம் 12 மணிக்கு தரப்பட வேண்டிய FIA சான்றிதழ், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கிடைத்தது. அதனால் பிற்பகல் தொடங்க இருந்த பயிற்சி பந்தயங்கள் தாமதமாகி தொடங்கப்பட்டன . அதற்கிடையில் கார் பந்தய வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் நேற்று இரவு ஃபார்முலா 4 கார் பந்தய இறுதி போட்டியான சர்கியூட் ரேஸ் நடைபெற்றது. தீவு திடலை சுற்றி 3.5 கிமீ சுற்றளவும், 19 திருப்பங்களும் கொண்ட இந்த பாதையில் மின்னல் வேகத்தில் கார் பந்தய வீரர்கள் தங்கள் அதிவேக கார்களுடன் சீறிபாய்ந்தனர். 6 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி பரிசு பொருட்கள், கேடயங்களை வழங்கினார். சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸிங், தெற்காசியாவிலேயே முதன் முதலாக இரவுநேர ஃபார்முலா 4 சர்கியூட் ரேஸிங் சென்னையில் நடைபெற்றுள்ளது குறிபிடத்தக்கது.
தமிழகத்தில் ஃபார்முலா 4 கார் ரேஸிங்வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததை அடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” இந்த கார் பந்தயம் சென்னைக்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கும் என நம்புகிறோம். இந்த ரேஸ் நடத்த ஒத்துழைத்த அனைத்து துறைகளுக்கும் நன்றி, தமிழக விளையாட்டுத்துறை வரலாற்றில் இந்த கார் பந்தயம் முக்கிய இடம் பிடிக்கும். இந்த கார் பந்தயம் கடந்தண்டு நடக்க வேண்டியது. புதியதாக சென்னையில் முதன் முதலாக கார் பந்தயம் நடந்து இருப்பதால் FIA பாதுகாப்பு சான்று வாங்குவதில் சற்று தாமதமானது. மற்றபடி எந்த குளறுபடியும் இல்லை. எல்லாம் சரியாக சென்றது. இந்தாண்டு வரவேற்பை கருத்தில் கொண்டு முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து அடுத்த ஆண்டு நடத்துவது பற்றி யோசிப்போம். ” எனக் கூறினார்.
ஃபார்முலா 4 கார் பந்தயம் பற்றி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், ” கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடிந்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு விளையாட்டுத்துறைக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். மேலும், ” தமிழகம் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகிறது. உலகத் தரம் வாய்ந்த வசதிகள் கொண்டு நாங்கள் நிகழ்வுகளை மட்டும் நடத்தவில்லை. இந்திய விளையாட்டுகளின் எதிர்காலத்திற்கு முன்னோடியாக செயல்பட்டு வருகிறோம். அதனால்தான் இந்தியாவின் ஒலிம்பிக் குழுவில் தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.’ என பதிவிட்டுள்ளார்.
ஃபார்முலா 4 கார் பந்தயம் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இது ஒரு ஆரம்பம் மட்டுமே. அதனை நன்றாகச் செய்து முடித்துள்ளோம். அடுத்து இன்னும் சிறப்பாக நடைபெறும். மேலும் இது இந்தியாவில் மோட்டார்ஸ்போர்ட்டுக்கு ஒரு பெரிய உந்து சக்தியாக இருக்கும்.” என கூறினார்.
இது போல மற்ற அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார்பந்தயத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.