மனோஜ் பாரதிராஜா மறைவு..நேரில் வந்து அஞ்சலி செலுத்திய த.வெ.க தலைவர் விஜய்!
மனோஜ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது இல்லத்தில் இருந்து நடந்தே சென்று அவருடைய உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சமீபத்தில், அவருக்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென அவர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்த நடிகர், இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தியும் வருகிறார்கள்.
ஏற்கனவே, நடிகர் சூர்யா, நடிகர் பிரபு, உள்ளிட்டோர் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள். அவர்களை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். தனது இல்லத்தில் இருந்து நடந்தே சென்று அவருடைய உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், இன்று மாலை 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் மனோஜ் உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. “தாஜ்மஹால்” (1999) திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மனோஜ் தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2023-ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் படம் மூலம் இயக்குனர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.