அமைச்சரவை நீக்கம்.! ஆதங்கத்தை வெளிப்படுத்தினரா மனோ தங்கராஜ்.? பின்னணி என்ன.?
மனோ தங்கராஜை அமைச்சரவையில் நீக்கிய பிறகு அவர் பதிவிட்ட எக்ஸ் தள பதிவு மற்றும் அதிமுகவில் இருந்து வந்த ஆதரவு விமர்சனம் ஆகியவை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. நீண்ட நாட்களாக திமுகவினர் எதிர்நோக்கி காத்திருந்த ‘ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘ எனும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. 3 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றம் செய்யப்பட்டன. 3 அமைச்சர்கள் நீக்கம் செய்யப்பட்டு 2 புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது.
முக்கிய மாற்றங்கள்…
இந்த அமைச்சரவை மாற்றத்தில் மிக முக்கிய மாற்றமாக பார்க்கப்படுவது மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டதும், அமைச்சர் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக வனத்துறை கொடுக்கப்பட்ட அறிவிப்புகளும் தான். இதில், மனோ தங்கராஜ் மட்டுமே தனது ஆதங்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மனோ தங்கராஜ் ஆதங்கம் :
மனோ தங்கராஜ் பதிவிட்ட எக்ஸ் தள பதிவில், தான் பொறுப்பு வகித்திருந்த துறைகள் பற்றியும், அதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் உருவான முன்னேற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். இதுநாள் வரையில் இல்லாமல் தற்போது அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகான இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.
2021இல் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5%இல் இருந்து 2022இல் 16.4% உயர்ந்தது என்றும், 2023இல் 25%-ஆக உயர்ந்தது என்றும், 2023இல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது, அது 2024இல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது என்றும் தான் பொறுப்பு வகித்த துறைகளின் முன்னேற்றம் பற்றி குறிப்பிட்டு இருந்தார்.
2021 – தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.
2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம்…
— Mano Thangaraj (@Manothangaraj) September 29, 2024
அதிமுக மறைமுக ஆதரவு .?
இப்படியாக, தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில், தான் திறமையாக செயல்பட்டு வந்ததாக நேரடியாகவே தனது டிவீட் மூலம் பதிவிட்டு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாற்றிவிட்டார் திமுக எம்.எல்.ஏ மனோ தங்கராஜ். இதனை நிரூபிக்கும் வகையில், திமுக அரசை விமர்சித்தாலும், அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு நேற்று செய்தியாளர் சந்திப்பில், மனோ தங்கராஜுக்கு மறைமுக ஆதரவு கருத்துக்களை கூறினார்.
கடம்பூர் ராஜு கூறுகையில், ” ஒரு அமைச்சரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு சரியான காரணம் இருக்க வேண்டும். ஆனால், மனோ தங்கராஜுக்கு எதிராக எந்த புகாரும் வந்ததாக தெரியவில்லை. அவர் பாஜக அரசையும், பிரதமர் மோடியையுமே தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். அதனால் தான் அவர் நீக்கம் செய்யப்பட்டாரா என்று தெரியவில்லை. மனோ தங்கராஜ் நீக்கப்பட்ட மர்மத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கூற வேண்டும்.” என கூறினார்.
பின்னணி என்ன.?
அதேநேரம் அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜை நீக்கியதற்கு ஒரு சில காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது, அவர் பொறுப்பு வகித்து இருந்த பால் வளத்துறையில் சில முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கன்னியாகுமரி கனிம வளங்கள் தொடர்பான டெண்டர்களில் தலையிட்டதாகவும், ஒரு இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி வாயிலாக முதலமைச்சருக்கு ஆதாரங்களுடன் புகார்கள் பறந்ததாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான் மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.