மணீஷ் காஷ்யப் வழக்கை ரத்து செய்ய முடியாது – தமிழக அரசு
மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை நீக்க கோரிய வழக்கில், தமிழக அரசு வாதம்.
மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் வைத்து வருகிறது.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் போலி வீடியோ பரப்பிய புகாரில் பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் கைதானார். பீகார் மற்றும் தமிழகத்தில் அவர் மீது தனித்தனி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி வீடியோ பரப்பிய புகாரில் பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில், கடந்த 6-ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, யூடியூபர் மணீஷ் காஷ்யப், தன் மீது பதியப்பட்ட பல்வேறு வழக்குப்பதிவுகளை இணைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.