நீதிக் கட்சியைச் சேர்ந்த திரு. பி. சுப்பராயன் மற்றும் திரு. பி.டி. இராஜன் ஆகிய இருவருக்கும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூக நீதி நாள்:
“சமூக நீதி என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது இடஒதுக்கீடு தான். இந்த சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியார் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவருடைய பிறந்தநாள் “சமூக நீதி” நாளாக கொண்டாடப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அதற்கு நன்றி தெரிவித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.
சமூக நீதி காத்த வீராங்கனை:
தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்ட போது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அந்த ஆபத்திலிருந்து பிற்படுத்தப்பட்ட மக்களையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்களையும் விடுவித்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்பதால் தான் அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் “சமூக நீதி காத்த வீராங்கனை” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இதைச் சொன்னால் அது மிகையாகாது:
இந்த வரிசையில், சமூக நீதிக்காக போராடியவர்களில் முக்கிய இடம் பெற்றிருப்பவர்கள் சென்னை ராஜதானியின் முன்னாள் முதலமைச்சர்களான டாக்டர் பி. சுப்பராயன் மற்றும் முன்னாள் பேரவைத் தலைவர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களின் தந்தையும், மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்களின் பாட்டனாருமான திரு. பி.டி. இராஜன் ஆகியோர். பொதுவாக இந்திய மக்களுக்கும், குறிப்பாக தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்தவர்கள் டாக்டர் பி. சுப்பராயன் மற்றும் திரு. பி.டி. இராஜன் என்று சொன்னால் அது மிகையாகாது.
1920-1937 காலகட்டத்தில், சென்னை ராஜதானியில் இரட்டை ஆட்சி முறை நடைமுறையில் இருந்தபோது, ஆட்சி புரிந்த ஐந்து அரசுகளில் நான்கு நீதிக்கட்சி அரசுகள்.
முதல் வகுப்புவாரி அரசாணை:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு என்று ஒரு நீண்ட நெடிய வரலாறு 1854 ஆம் ஆண்டு அன்றைக்கு இருந்த வருவாய் வாரியம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையிலிருந்து தொடங்கியது என்றாலும், 1920 ஆம் ஆண்டு நீதிக் கட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு தான் இடஒதுக்கீட்டுக் கொள்கை புதிய பரிமாணத்தை பெற்றது.
அதாவது வருவாய்த் துறையில் மாத்திரம் நிலவி வந்த இடஒதுக்கீடு அரசின் எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அரசுப் பணிகளில் சேர்க்கப்படுவோர் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் பணிகளில் அமர்த்தப்படுவோரின் எண்ணிக்கை பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் வகையில் 1921 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆணை தான் முதல் வகுப்புவாரி அரசாணை, அதாவது First Communal Government Order ஆகும்.
இதனைத் தொடர்ந்து, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களில் முதல் முறையாக சென்னை ராஜதானியின் முதலமைச்சராக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த பெருமை டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு உண்டு. 1926 முதல் 1930 வரை சென்னை ராஜதானியின் முதலமைச்சராக பதவி வகித்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில் தான்’ வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை விரிவுபடுத்தப்பட்டது.
மக்கள் தொகை அடிப்படையில் அரசுப் பணிகள்:
அதாவது, 1927 நவம்பர் 4-ஆம் தேதி அன்று அந்தந்த இனங்களின் மக்கள் தொகை அடிப்படையில் அரசுப் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பிலிருந்து எழுப்பப்பட்ட கோரிக்கையை ஏற்று, 12 அரசுப் பணியிடங்கள் காலி என்றால், அவற்றுள் 5 பணியிடங்கள் பிராமணர் அல்லாதோருக்கும், 2 பணியிடங்கள் பிராமணருக்கும், 2 இடங்கள் ஆங்கிலோ-இந்தியர் மற்றும் கிறிஸ்தவருக்கும், 2 இடங்கள் முகமதியருக்கும், ஒரு இடம் நலிவடைந்த வகுப்பினருக்கும் என்று இடஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த இடஒதுக்கீடு முறை 1947 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.
இட ஒதுக்கீடு – இவர்களுக்கு முக்கிய பங்கு:
நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. பி. சுப்பராயன் அவர்கள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் முதலமைச்சராகவும், திரு. பி.டி. இராஜன் அவர்கள் உள்ளாட்சி மற்றும் பொதுப் பணிகள் துறை அமைச்சராகவும், கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் முதலமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். இடஒதுக்கீட்டுக் கொள்கையை தமிழ்நாட்டில் வித்திட்டதில் திரு. பி. சுப்பராயன் மற்றும் திரு.பி.டி. இராஜன் ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு.
எனவே, தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு அடித்தளமிட்ட நீதிக் கட்சியைச் சேர்ந்த திரு. பி. சுப்பராயன் மற்றும் திரு. பி.டி. இராஜன் ஆகிய இருவரையும் கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு மணிமண்டபங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…