மாமல்லபுரத்தை நெருங்கும் “மாண்டஸ்” புயல்! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!
மாமல்லபுரத்திற்கு 180 கிமீ தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கி வருகிறது. மாமல்லபுரத்திற்கு 180 கிமீ தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 260 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று முதல் நாளை அதிகாலை வரை மணிக்கு 60 – 70 கிமீ வேகத்தில், சில சமயங்களில் 85 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். நாளை காலை முதல் மாலை வரை மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இன்று நள்ளிரவு மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 வீரர்கள் கொண்ட பேரிடர் மீட்பு படையின் 3 அணிகள் தயாராக உள்ளது என்றும் கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மக்களுக்கு புயல் குறித்து அறிவிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.