விஜய் உடன் மாமன், மச்சான் கூட்டணி – அண்ணாமலை கலகல பேச்சு.!
சென்னை : விஜய் வந்தால், எங்க கூட்டணி மாமன் மச்சான் கூட்டணி தான், பங்காளி கூட்டணி வேணாம் என்று அண்ணாமலை கூறிஉள்ளார்.
தி.மு.க அரசு சார்பில் நடத்தப்பட்ட கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில், பா.ஜ.க தலைவர்கள் கலந்துகொண்டது, தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. அது குறித்து அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர், “அதிமுக, திமுக பங்காளி கட்சிகள்தான், ஆனால் அந்த பங்காளிகளுடன் சேரப்போவதில்லை. பங்காளிகள் வேண்டாம். பாஜக தலைமையில் மாமன், மச்சான் கூட்டணி அமைக்கப்படும்” என்று நகைச்சுவையாக பேசியுள்ளார்.
விஜய் கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு, அவரும் மாமன், மச்சான்தான் என அண்ணாமலை பதில் கூறியுள்ளார். இவ்வாறு அண்ணாமலை கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
பாஜகவை பற்றி தமிழ்நாட்டில் பரப்பப்படும் தவறான பிரச்சாரத்தை முறியடித்து பாஜகவை பற்றி நல்லவிதமாக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என உடன்பிறப்புகளுக்கு பேசியவர் கருணாநிதி. அப்படிபட்ட பெரிய, அரசியல் தலைவர் கருணாநிதிக்கு கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் முதுகெலும்பு வளையாமல் நான் வணக்கம் செலுத்தினேன். அதனை பெருமையாக பார்க்கிறேன்.
மறைந்த தலைவர்களின் இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துவது தவறில்லை, அடிமைப்போல் கூனி குறுகி காலில் விழுந்து பதவிக்கு தவழ்ந்துகிடப்பதே தவறு என்று கலாய்த்துள்ளார். என் மீது போடப்பட்ட வழக்கிற்கு இதுவரை திமுக தரப்பில் வாபஸ் பெறவில்லை. இன்று வரை எதிர் துருவமாக இருந்து தான் திமுக, பாஜக அரசியல் செய்கிறது” என்று கூறிஉள்ளார்.