மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் குற்றசாட்டு – தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுப்பு
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த குற்றச்சாட்டுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மே 2ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஓட்டு எண்ணும் மையங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், கண்டைனர் லாரிகள் அடிக்கடி வந்து செல்வதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தெரிவிப்பது போல, குறிப்பாக கமல்ஹாசன் தெரிவித்தது போன்று, வாக்கு எண்ணிக்கை மையங்களில் எந்த குளறுபடிகளும் நடக்கவில்லை, எந்த தவறும் நடைபெறவில்லை என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. லாரிகளில் காவலர்களுக்கான நடமாடும் கழிவறை சாதனங்கள் இருக்கின்றன. வேறு எந்த பொருட்களும் அதில் கொண்டு வரப்படவில்லை சத்யபிரதா சாகு தெரிவித்தார்.