அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் – டிடிவி தினகரன்
எனது மகளின் திருமணம் முடிந்த பிறகு கோவில்பட்டியிலேயே வீடு எடுத்து தங்கி விடுவேன் என டிடிவி தினகரன் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று கரிசல்குளம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நீங்கள் என்னை தான் வெற்றி பெறச் செய்வீர்கள். ஆனால், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாரந்தோறும் கோவில்பட்டிக்கு வந்து மக்களின் குறைகளை கேட்டறிவேன் என கூறினார்.
எனது மகளின் திருமணம் முடிந்த பிறகு கோவில்பட்டியிலேயே வீடு எடுத்து தங்கி விடுவேன் என்றும் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும், சாலை வசதி செய்து தரப்படும், சுகாதாரம் மேம்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார். இதற்கு முன்பு காமநாயக்கன்பட்டியில் பேசிய அவர், காமநாயக்கன்பட்டி கிராமத்தை கயத்தாறு வட்டத்திலிருந்து பிரித்து, கோவில்பட்டி வட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். அரசு பள்ளி தரம் உயர்த்தப்படும், கல்லூரி அமைக்கப்படும், குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என கூறிய அவர், 60 வயதிக்ரு மேற்பட்ட விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். கோவில்பட்டியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்ற குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.