பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம்.! திமுக எம்எல்ஏ மகன், மருமகளை கைது செய்த தனிப்படை.!
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் வீட்டில் பணிப்பெண்ணாக விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த சிறுமி வீட்டு வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.
பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம்.. கொத்தடிமை முறை.? போராட்டத்தை அறிவித்த அதிமுக.!
பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு திரும்பிய சிறுமி, உடல்நல பாதிப்பு காரணமாக உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வீட்டு வேலைக்கு சேர்ந்த தன்னை, மெர்லினா, ஆண்டோ ஆகியோர் அடித்து கொடுமைபடுத்தியதாகவும், சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், சரியாக வேலை செய்யவிலை என கூறி சூடு வைத்ததாகவும் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார்.
இந்த வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு, வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை மகளிர் காவல்துறையினர், சிறுமியிடம் நேரடி வாக்குமூலம் பெற்றனர். பின்னர் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் (சிறுமி பட்டியலின் சமூகத்தை சேர்ந்தவர்), குழந்தை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டோ மற்றும் மெர்லினா இருவரும் விசாரணைக்கு சரணடைய போலீசார் கூறியதாக தெரிகிறது. ஆனால் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகினர். இதன் காரணமாக அவர்களை பிடிக்க நீலாங்கரை காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்தனர்.
இந்நிலையில், ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினாவை தனிப்படை போலீசார் இன்று ஆந்திராவில் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது . முன்னதாக இன்று பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை 4 மணிநேரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிறுமி வாக்குமூலம் கொண்டு ஆண்டோ மற்றும் மெர்லினாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.