லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் வந்துள்ளார் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தேர்தலுக்கு முன்பு மகேந்திரன் போன்றோர் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு.
சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய மகேந்திரன், 78 ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மநீம-வில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்துள்ளார்.
இந்நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் பேசிய மு.க ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் திமுக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததை நினைத்து வருத்தப்படுகிறேன். தேர்தலுக்கு முன்பு மகேந்திரன் போன்றோர் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் உள்ளிட்டவர்கள் திமுகவுக்கு வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுகவில் இணைந்த பிறகு பேசிய மகேந்திரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் சாதாரண தொண்டனாக செயல்படுவேன். திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி என்றும் திமுகவின் கொள்கைகளே எனது சித்தாந்தமாக இருந்தது எனவும் பேசியுள்ளார்.