100 நாள் வேலைத்திட்டம்;ஒரே நேரத்தில் ஊதியம் அளிக்க வேண்டும் – ஓபிஎஸ் கோரிக்கை!

Default Image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணி புரிந்தவர்களுக்கான ஊதியத்தை ஒரே சமயத்தில் வழங்குவதுதான் இயற்கை நியதி,இல்லையென்றால் பின்விளைவுகள் கடுமையாக ஏற்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ்(100 நாள் வேலைத்திட்டம்) பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து, அனைத்துப் பிரிவினரிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாவ அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ஊரகப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையிலும், கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், கிராமப்புற மக்களின் வேலைக்கான உத்தரவாதத்தை நிலைநாட்டும் வகையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் ஏழை எளிய மக்களுக்கான ஊதியம் ஒரு சில பிரிவினருக்கு தாமதமாக தரப்படுவதன் காரணமாக மக்களிடையே பதற்றம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன.

கிராமப்புற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ஒரே பணியாளர் வருகைப் பதிவேட்டின்கீழ், ஒரே இடத்தில், ஒன்றாக, குறிப்பிட்ட நாட்களுக்கு பணியாற்றியவர்களுக்கான ஊதியம் ஒரு சில பிரிவினருக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் அளிக்கப்பட்டு விடுவதாகவும், ஒருசில பிரிவினருக்கு இரண்டு மாதங்கள் ஆகின்றன என்றும், இதன் காரணமாக பணியாளர்களிடையே சந்தேகமும், கசப்பு உணர்வும் ஏற்படுவதாகவும், இது குறித்து ஊராட்சி அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், அனைவருக்குமான ஊதியம் ஒன்றாகத்தான்
சமர்ப்பிக்கப்படுகிறது என்றும், ஆனால் அதற்கான ஊதியம் பிரித்து அனுப்பப்படுவதாகவும், இந்தப் பிரச்சனை ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், பிகார், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலவுவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சித் துறை மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிந்ததற்கான ஊதியம் மற்ற பிரிவினரைக் காட்டிலும் ஜூன் மாதத்தில் தாமதமாக கிடைத்ததாக ஏராளமான புகார்கள் வந்திருப்பதாக கூறியுள்ளார் என பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல் ஆகும். இந்த நிலை நீடித்தால், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் கடுமையாக இருப்பதோடு, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும்.

ஒரே இடத்தில் ஒன்றாக பணி புரிந்தவர்களுக்கான ஊதியத்தை ஒரே சமயத்தில் வழங்குவதுதான் இயற்கை நியதி. இந்த இயற்கை நியதியைப் பின்பற்றி ஊதியம் வழங்கப்படும்போது, பணிபுரிபவர்களிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும், சகோதரத்துவமும் ஏற்படுவதோடு, பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் மேலும் சிறப்பாக பணியாற்றவும் வழிவகுக்கும். மாறாக, ஊதியத்தை ஒரு பிரிவினருக்கு முன்னதாகவும், மற்றொரு பிரிவினருக்கு தாமதமாகவும் அளித்தால் பணிபுரிபவர்களிடையே மனக் கசப்பை உண்டாக்குவதோடு, தாமதமாக ஊதியம் பெறுபவர்களின் பணிபுரியும் ஆர்வமும் குறைந்துவிடும்.

இந்தியாவில் உள்ள பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களுக்கு சரியாக எவ்வளவு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்பதை கண்டறியும் பொருட்டு மத்திய அரசு புதிய முறையை நடப்பாண்டு முதல் செயல்படுத்தியுள்ளது தான் இதற்குக் காரணம் என்றாலும், இதில் உள்ள சாதக பாதகங்களை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு. நேற்றுகூட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இத்திட்டத்தின்கீழ் நிலுவையாக உள்ள 1,178 கோடி ரூபாயை விடுவிக்குமாறு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். ஆனால், மத்திய அரசு தற்போது பின்பற்றி வரும் நடைமுறையில் உள்ள சாதக, பாதகங்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து, அனைத்துப் பிரிவினரிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi