மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாள்- ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை!

Default Image

மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு,பாரதி கண்ட பாரதத்தை உருவாக்க உறுதியேற்போம் என்றும்,சுதந்திர வேட்கையை அனைவரது நெஞ்சங்களிலும் விதைத்தவரும்,பெண் கல்வியை போற்றியவருமான பாரதியை வணங்குவதாகவும் ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 11 ஆம் தேதியான இன்று மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்த நாளாகும்.இந்நிலையில்,பாரதியாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து,மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்த நாளான இன்று,தமிழுக்குத் தொண்டுசெய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,சுதந்திரம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க யோசனை கூறியதோடு, நாடும், வீடும் வாழ வேண்டும் என்று விரும்பிய மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான இன்று அவருக்கு தனது மரியாதையையும், வீர வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இது தொடர்பான அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது தம் கவிதைகள் மூலம் உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பி விடுதலை உணர்வினை ஊட்டிய விடுதலைப் பெறுவதற்கு அடைந்துவிட்டொமென்று’ பாடிய தீர்க்கதரிசி. இமயம் முதல் குமரி வரை ஒரே நாடாய்க் கண்டு நாட்டுப்பற்றை போற்றும் வகையில் பாடிய தேசியக்கவி, ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்குங் காணோம்’ எனத் தமிழ் மொழியின் சிறப்பையும் உயர்வையும் உலகிற்கு எடுத்துக்கூறினார். ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ எனப் பெண் உரிமை குறித்து குரல் எழுப்பியவர் பாரதியார். ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று வாழும் மனிதர் அனைவர்க்கும் உணவு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர்.

சுதந்திரம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க யோசனை கூறியதோடு, நாடும், வீடும் வாழ வேண்டும் என்று விரும்பிய மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையையும், வீர வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பிறந்த நன்னாளான இன்று, பாரதி கண்ட பாரதத்தை உருவாக்குவோம் என்று நாம் அனைவரும் உறுதியேற்போம்.வாழிய பாரத மணித் திருநாடு”,என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம்,கல்வியை போற்றியவர், ஜாதிய வேறுபாடுகளை கலைந்தவர், திருக்குறளுக்கு அடுத்து குழந்தைகள் விரும்பும் பல பாடல்கள் தந்த மகாகவி பாரதியார் புகழை போற்றி வணங்குவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“தொன்மை கொண்ட தமிழ் மொழி மீது தீரா பற்று கொண்டவர், சுதந்திர வேட்கையை அனைவரது நெஞ்சங்களிலும் விதைத்தவர், பெண் கல்வியை போற்றியவர், ஜாதிய வேறுபாடுகளை கலைந்தவர், திருக்குறளுக்கு அடுத்து குழந்தைகள் விரும்பும் பல பாடல்கள் தந்த மகாகவி பாரதியார் புகழை போற்றி வணங்குகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்