மகா விஷ்ணு அதிரடி கைது! தீவிர விசாரணையில் ஈடுபடும் காவல்துறையினர்!
வெளிநாட்டிலிருந்து சென்னை வந்தடைந்த ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை : மாற்றுத்திறனாளிகளை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை மேற்கொண்ட மகா விஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் உள்ள அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மூடநம்பிக்கையை விதைக்கும் வகையிலும், மாற்று திறனாளிகளை காய படுத்தும் வகையிலும் சொற்பொழிவு ஏற்றிருந்தார். இவர் பேசும் போதே இது மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என மாற்றுத் திறனாளி ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார்.
அதற்கு அவரையும் மகாவிஷ்ணு மைக்கில் பேசி அவரை அவமானப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூகத்தளத்தில் வைரலாகி பரவி வந்தது. அதனை தொடர்ந்து அசோக் நகர் காவல் நிலையத்தில் மகா விஷ்ணு மீது நேற்று புகார் அளிக்கப்பட்டது.
அனைத்து உலக மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்திலும் மகா விஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் நேற்று போலீசார் விசாரணையைத் தொடங்கிய போது மகாவிஷ்ணு அவரது இடத்தில் இல்லாத நிலையில் அவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால், அவர் பயந்து தலைமறைவு ஆகிவிட்டார் என கூறி வந்தனர்.
அதனை தொடர்ந்து, மகா விஷ்ணு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “நான் எங்கும் ஓடி ஒழியவில்லை, தலைமறைவாகவுமில்லை. நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன், இன்று சென்னை வருவேன். சென்னை வந்தவுடன், அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்து இது குறித்து உரிய விளக்கம் அளிப்பேன்”, என கூறி இருந்தார்.
மேலும், மகாவிஷ்ணுவின் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருவதால், வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பியதும் போலீசார் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், அவரை விசாரணைக்கு அழைத்து செல்வதற்கு காவல் துறையினர் விமான நிலையத்தில் இன்று குவிந்திருந்தனர்.
தற்போது, வெளிநாட்டிலிருந்து வந்திறங்கிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே வைத்து காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது எழுந்த இந்த புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்வதற்கு சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக சென்னை விமான நிலையம், சைதாப்பேட்டை, அடையாறு போன்ற காவல் நிலையங்களில் அதிக போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.