தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கான சித்த மருத்துவ மையம் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!
கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதிலும் சித்த மருத்துவ மையத்தை திறக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இந்தியாவிலும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையிலான மருத்துவர்களும் மாநகராட்சி ஊழியர்களும் வழி எழுப்பியுள்ளனர்.
அப்பொழுது அங்கு பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சென்னையில் பரவும் விதம் குறைந்து வருகிறது. கடந்த 23ஆம் தேதி முதல் செயல்பட்டு வரக்கூடிய இந்த சித்த மருத்துவ மையத்தில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்ற 8 பேர் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர். யாருக்குமே ஆக்சிஜன் பயன்பாடு தேவைப்படவே இல்லை.
உணவே மருந்து என்னும் அடிப்படையில் தான் இங்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. அனைத்து நோய்களுக்கும் எதிராக உடலில் எதிர்ப்பு சக்தி உருவாக்கக்கூடிய சித்த மருத்துவ முறை தான் இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. எனவே தமிழகம் முழுவதிலும் விரைவில் சித்த மருத்துவ மையம் ஆரம்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்படும் எனவும் நோய் தொற்று ஏற்படக்கூடியவர்களுக்கு பயம் இல்லாத சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.