மதுரை ரயில் தீ விபத்து – 40க்கும் மேற்பட்டோருக்கு சம்மன்!
மதுரையில் ரயில் பெட்டியில் தீ குறித்து 40க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. லக்னோவில் இருந்து மதுரை வரையிலான ரயில் நிலைய ஊழியர்கள் 40க்கும் அதிகமானோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரயில் பெட்டியில் எரிவாயு சிலிண்டர், விறகு, அடுப்பு எப்படி கொண்டு வரப்பட்டது குறித்து விசாரணை நடத்தவும், ரயில் பெட்டியில் தீப்பற்ற கூடிய பொருட்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை அருகே சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். மறுபக்கம், மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை செப்.11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது. அதன்படி, உத்தர பிரதேசத்தை சேர்ந்த தீபக், பிரகாஷ் ரஷ்தோகி, சுபம் காஷ்யப், நரேந்திரகுமார் மற்றும் ஹர்திக் சஹானே ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.