மதுரை ரயில் விபத்து – 6 உடல்கள் அடையாளம் காணப்பட்டன!
இன்று காலை மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் சுற்றுலா ரயிலின் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட சிலிண்டரே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் ஆன்மிக பயணம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் பயணித்த ரயில் பெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் சந்திரசேகரன், சதாசிவம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை இறந்தவர்களின் 9 பேரின் உடல்களை 20 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை செய்து வருகிறது.
இந்த நிலையில், மதுரையில் ரயில் பெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரில் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில், ஒரு ஆண், 5 பெண்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பரமேஸ்வரர் யாழ் குப்தா (55), சமன் சிங் சாந்து (பெண்), நிதிஷ்குமாரி ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், மனோ ஆகுத், ஹிமான் பன்வால் மற்றும் சாந்தி தேவி ஆகியோரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.