பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்.! அர்ஜுன் சம்பத்திற்கு மதுரை போலீஸ் சம்மன்.!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே , விக்கிரமங்கலம், கீழ்ப்பட்டியை சேர்ந்தவர் சுமதி. கணவரை இழந்த இவர் வீட்டருகே பால்பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கணவரின் சொத்துக்கள் தொடர்பாக கணவர் வீட்டாரோடு பிரச்சனை எழுந்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து, கடந்த 16ஆம் தேதி அதிகாலையில் சுமதி வீட்டில் தூங்கி கொண்டு இருந்த சமயத்தில் சில மர்ம நபர்கள் , வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் வீட்டின் முன் நிறுத்தி வைத்து இருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் காயமடைந்த சுமதி வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
பட்டாசு கூடாது.. பாடல்கள் கூடாது.. 500 பேர் தான்.! RSS பேரணிக்கு கடும் கட்டுப்பாடுகள்.!
சம்பவம் அறிந்து சுமதி வீட்டிற்கு வந்த காவல்துறையினர் , சுமதியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து இந்து மக்கள் முன்னணி கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழகத்தில் அரிவாள், கத்தி, பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் அதிகரித்து விட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என பதிவிட்டு இருந்தார். குடும்ப தகராறு பிரச்னையை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என பதிவிட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என இந்து மக்கள் முன்னணி கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு செக்கானூரணி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.