எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!

என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு உள்ளது என மத்திய அரசை விமர்சித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

Madurai MP Su Venkatesan

சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற் போலவே மத்திய அரசின் சில செயல்பாடுகளும் அரங்கேறி வருகின்றன. அப்படியொரு நிகழ்வை சுட்டிக்காட்டி தான்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது கண்டன பதிவை சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவர் குறிப்பிட்ட பதிவில் கேரள மாநில கல்வியமைச்சர் வி.சிவன்குட்டி இந்தி திணிப்பு பற்றிய கூறிய கண்டனம் பற்றிய செய்தித்தாளை பதிவிட்டு இருந்தார். கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, ஆங்கில வழி பாடப்புத்தகங்களில், ஆங்கில பெயர்களை கூட இந்தி பெயர்களாக மாற்றி வழங்கிய NCERT-யின் முடிவை “பகுத்தறிவற்றது” என்றும் “பொது அறிவுக்கு எதிரானது” எனவும் விமர்சித்தார். இது இந்தியாவின் மொழி பன்முகத்தன்மையை புறக்கணிக்கிறது, கூட்டாட்சி கோட்பாடுகளை மீறுவதாகவும், இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி மொழியை திணிப்பதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசு இந்த முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இதற்கு எதிராக மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், தேசிய கல்விக் கொள்கையின் மூன்று மொழி திட்டத்தை இந்தியை முன்னிறுத்துவதாக எதிர்ப்பதைப் போலவே இந்த விமர்சனமும் உள்ளது. ஆங்கில வழி மாணவர்களுக்கு ஆங்கில தலைப்புகள் தேவை எனவும், கல்வி அதிகாரமளிக்க வேண்டுமே தவிர இந்தி திணிக்கக்கூடாது எனவும் அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி கூறியதாக அந்த செய்தி தாளில் உள்ளது.

அடுத்த புகைப்படத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அந்ததந்த துறை சார்ந்து அளிக்கும் பதில் கூட இந்தியில் இருப்பதை புகைப்படத்துடன் சுட்டிக்காட்டி உள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் . மேலும்,  ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தியில் இருக்கிறது. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தியில் வருகிறது. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு உள்ளது.

இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் (பாஜக மாநிலத் தலைவர்) எழுதுவாரா?” என்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்