ஆக்சிஜன் லாரிக்காக நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்து பணியாற்றிய மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி..!பாராட்டிய மக்கள்..!
மதுரை அரசு ராஜாஜி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஆக்சிஜன் லாரிக்காக நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்து எம்.பி. வெங்கடேசன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி பணியாற்றியுள்ள சம்பவம் பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 24 மணி நேரமும் தென்மாவட்ட மக்கள் அனைவரும் சிகிச்சை பெறும் வகையில் சிறப்பு மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் 1,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்,நேற்று மாலை 3 மணிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் லாரி இரவு 10 மணி ஆகியும் வராததால்,தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வேங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்சிஜன் தேவை குறித்து ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி நள்ளிரவு 1 மணி வரை லாரிக்காக காத்திருந்தனர்.
அதன்பின்னர்,லாரி வந்ததும் மருத்துவமனை கொள்கலனில் ஆக்சிஜன் ஏற்றும் பணி நடந்தது.இருப்பினும்,லாரி வருகை தாமதமானது குறித்து மருத்துவமனை முதல்வர் சங்குமணி,மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார் மற்றும் கூடுதல் ஆட்சியர் பிரியதர்ஷினி ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து,கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதின் அத்தியாவசியத்தை உணர்ந்து தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வேங்கடேசன் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சிலர் ஆக்சிஜன் லாரி வரும் வரை காத்திருந்த சம்பவம் பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.