#Breaking:சமஸ்கிருதத்தில் உறுதிமொழி – கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது.இதனைத் தொடர்ந்து,மேடையில் பேசிய அமைச்சர் பிடிஆர்,சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கபட்டது அதிர்ச்சியளிக்கிறது என அதிருப்தி தெரிவித்தார்.
இதனையடுத்து,சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக விளக்கமளிக்கு கல்லூரி முதல்வர் ரத்னவேல் அவர்கள் விளக்கமளிக்க மருத்துவ கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது.அதன்பின்னர்,தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதள பக்கத்தில் ஆங்கிலத்தில், சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்த உறுதிமொழியை மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஒருவர் தவறுதலாக பதிவிறக்கம் செய்து விட்டதாகவும்,மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டால் சம்மந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்தார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.