களைகட்டிய மதுரை ஜல்லிக்கட்டு ஆன்லைன் விண்ணப்பம்! 5,347 வீரர்கள் முன்பதிவு!
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 12,632 காளைகளும், 5,347 மாடுபிடி வீரர்களும் விண்ணப்பம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி 14 முதல் 16 வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.அவனியாபுரத்தில் வரும் 14-ந்தேதி , 15-ந்தேதி பாலமேடு, 16-ந்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவிருக்கிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நாட்கள் நெருங்கியுள்ள நிலையில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி, மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 12,632 காளைகளும், 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி-க்கு 5,786 காளைகளும், 1,698 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி-க்கு 4,820 காளைகளும், 1,914 மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி-க்கு 2,026 காளைகளும், 1,735 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
பதிவுகள் ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளதால், காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தகுதிப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு QR கோடு கொண்ட ஆன்லைன் டோக்கன் மூலம் தகவல்கள் அனுப்பப்படும். அந்த டோக்கனை காண்பிப்பதன் மூலம், போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.