#BREAKING : சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் பிரபலமான அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒரு யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், ‘ நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது’ என அவர் கருத்து கூறியிருந்தார்.
அவர் கூறிய கருத்துக்கு எதிராக நீதிமன்றம் தானாக முன்வந்து குற்றவியல் வழக்கு பதிவு செய்தது . இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த மாதம் அவர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கபட்டது. அதனை தொடர்ந்து அவர் நேரில் ஆஜரானர். அப்போது
நீதிபதிகள் , ‘இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை குறித்து பொது வெளியில் (யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்கள்) விவாதிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் ‘ என கூறினர். இதனை சவுக்கு சங்கர் ஏற்க மறுத்துவிட்டார்.
அவர் கூறுகையில், ‘ இந்த வழக்கு குறித்து பொது வெளியில் பேசமாட்டேன் என்ற உத்தரவாதம் அளிக்கமுடியாது. வழக்கை விசாரிக்கும் இந்த நீதிமன்ற அமர்வு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்’ என சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தது இருந்தார். இதனை தொடர்ந்து தான் இந்த வழக்கு இன்றைய தேதிக்கு (செப்டம்பர்15) ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது சவுக்கு சங்கர் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு இல்லை என குறிப்பிட்டார். நீதிதுறையில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை. பட்டியல் இந நீதிபதிகள் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கின்றனர். அருந்ததியினர் இனத்தை சேர்ந்த நீதிபதிகள் ஒருவர் கூட இல்லை. இந்த நீதிமன்ற தரவுகள் அடிப்படையில் தான் நான் தகவல்களை குறிப்பிட்டேன். நீதிமன்றத்தை அவமதிப்பது எனது நோக்கமல்ல. பேச்சுரிமை அதற்கான உரிமையை வழங்குகிறது என நம்புகிறேன் என தனது தரப்பு வாதத்தை குறிப்பிட்டார்.
பிறகு, நீதிபதிகள் அவர் தரப்பு வாதத்தை ஆராய்ந்தனர். அதுவரையில் அவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்தார். பின்னர், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும், சவுக்கு சங்கர் தவறாக பதிவிட்ட கருத்துக்களை நீக்குவதற்கும் உத்தரவுகளை பிறப்பித்தனர்.