22 நாட்களுக்கு பிறகு மதுரையில் பூத்து குலுங்கும் மலர்ச்சந்தை.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும், தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.
குறிப்பாக விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லமுடியாத சூழல் ஆங்காங்கே நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மதுரையில் ஊரடங்கு காரணமாக கடந்த 22 நாட்களாக முடங்கியிருந்த மலர்ச்சந்தை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இன்று மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் மற்றும் மதுரை ஆரப்பாளையம் ஆகிய இடங்களில் மலர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 105 கடைகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 60 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடைகளுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி விடப்பட்டுள்ளது. மலர்களை வாங்க வரும் பொதுமக்களும் சமூக இடைவெளி உடன் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முகக்கவசம் இன்றி வரும் பொதுமக்கள் மலர் சந்தைக்குள் அனுமதிக்கபடுவதில்லை. இந்த விதிமுறைகளை கண்காணிக்க தோட்டக்கலை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் கண்காணிப்பில் உள்ளனர்.
22 நாட்களுக்கு பிறகு இன்று மலர் சந்தை திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் வரவு குறைந்து காணப்படுகிறதாம். நாளை பொதுமக்கள் கூட்டம் வழக்கம்போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.