இனிதே நிறைவு பெற்ற சொக்கர்-மீனாட்சி திருக்கல்யாணம்… வீட்டிலிருந்தே மங்கள நாணை மாற்றிய பக்தர்கள்….
கோவில் நகரமாம் மாநகர் மதுரையிலே மதுரையை அரசாளும் அரசி உமையாளுக்கும் அரசன் சொக்கநாத சுந்தரேஸ்வரருக்கும் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் கடல் அலைபோல் திரண்டு வருவார்கள். அப்போது மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படும். ஆனால் தற்போது கொடிய கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயால் இந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. எனவே இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், மொய் விருந்து என அனைத்து விழாக்களும் தடை ஏற்பட்டுள்லது. இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக இன்று காலை மக்கள் கூட்டமின்றி அரசு வழிகாட்டலின் படி பாதுகாப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இன்று காலை சரியாக 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் சிவாச்சாரியார்களால் நடந்தது. மேலும் அங்கு 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள்மேலும் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை உள்ள நிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு களிக்க இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான www.tnhree.gov.in மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் www.maduraimeenakshi.org ஆகியவற்றிலும், கோவில் முகநூல் பக்கத்திலும் மற்றும் திருக்கோவில் யூ டியூப் அலைவரிசையிலும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. எனவே ஆண்டாண்டு காலம், பெருந்திரள் மக்கள் கூட்டத்தோடு நடைபெறும் இந்த திருவிழாவை இந்தாண்டு தமிழ் குலவதுக்களால் நேரில் காண முடியவில்லை. ஆனால் அந்த நிகழ்வை கோவில் நிர்வாகம் நேரடியாக ஒளிபரப்பு செய்தால் வீட்டில் இருந்தே பெண்கள் இறைவனை வேண்டி மங்கலநாணை மாற்றிக் கொண்டனர்.