கஞ்சா வழக்கு : சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல்!
நேற்று தேனி போலிசாரால் சென்னையில் கைது செய்யப்பட்ட யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல் விதித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார் தேனியில் வைத்து கைது செய்தனர். அப்போது அவரிடம் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, தேனி பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கருக்கு பல முறை ஆஜராக நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து சவுக்கு சங்கர் மீது மதுரை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்த பிடிவாரண்டை அடுத்து, நேற்று (டிசம்பர் 17) சென்னையில் வைத்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை அடுத்து அவர் தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு, தேனி மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அப்போது, நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது, யூ-டியூபர் சவுக்கு சங்கர் வீடியோ எடுத்த பத்திரிகையாளர்களை பார்த்து ‘டாடா’ காட்டி சென்றார். அதன்பிறகு மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டனர்.