மதுரை மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும்.. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி – இபிஎஸ்
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும் என இபிஎஸ் பேட்டி.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட சென்னை பெரம்பூர் அதிமுக செயலாளர் இளங்கோவன் படத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர் சந்தில் பேசிய இபிஎஸ், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும் என்றார்.
சட்டம் – ஒழுங்கு பிரச்சனை:
மேலும் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து குற்ற செயல்கள் அதிகரித்துள்ளன குற்றசாட்டினார். அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரமாக சென்னை திகழ்ந்தது. அதிமுக ஆட்சியில் இருந்த போது சட்டம் – ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டது, சட்டத்தின் ஆட்சி நடந்தது.
அதிமுக மாநில மாநாடு:
இன்றைய நிலையில், சட்ட ஒழுங்கு படிப்படியாக சீர்குலைந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அரசு அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், மதுரையில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடக்க உள்ள அதிமுக மாநில மாநாடு, ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும். இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் மதுரையை நோக்கி பார்க்கும் வகையில், அதிமுக மாநில மாநாடு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு வழங்குங்க:
இதனிடையே பேசிய இபிஎஸ், சென்னை வியாசர்பாடியில் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட இளங்கோவன் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. சட்டரீதியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.