மதுரை கட்டிடம் இடிந்து காவலர் பலி – 4 பேர் கைது..!
மதுரையில் இடிந்த கட்டடத்தின் உரிமையாளர் முகமது இத்ரீஸ், மேலாளர் அப்துல் ரசாக், நாக சங்கர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை கீழவெளி பகுதியில் நடமாடும் தேநீர் கடையில் தேநீர் விற்பனை நடைபெற்று இருந்தது. இதனால், அந்த இடத்தில் அதிகமாக கூட்டம் இருந்த நிலையில் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு இரவு நேர ரோந்து பணியில் இருந்த சரவணன், கண்ணன் இருவரும் கூறி விட்டு அதே பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்து தலைமைக் காவலர் சரவணன் உயிரிழந்தார். காயமடைந்த தலைமைக் காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து, உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவியும், காயமடைந்த தலைமைக் காவலரான கண்ணனுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கட்டடத்தின் உரிமையாளர் முகமது இத்ரீஸ், மேலாளர் அப்துல் ரசாக், நாக சங்கர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.