யூடியூப்பர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து- மதுரை கிளை உத்தரவு..!
யூடியூப்பர் மாரிதாஸ் மீது நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பதியப்பட்டிருந்த வழக்கு மதுரை கிளை ரத்து செய்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 2–ஆம் தேதி மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில், தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பினார்கள் என பேசியிருந்தார். இது குறித்து நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதனடிப்படையில், கடந்த வாரம் போலீசார் இவ்வழக்கில் மாரிதாஸை கைது செய்தனர். பின்னர், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸை டிசம்பர் 30 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக மாரிதாஸ் மீது வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.
மாரிதாஸ் இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்குள்ளாகும் வகையிலோ அல்லது அதனை இழிவுபடுத்தும் விதமாகவோ எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை என கூறி வழக்கு ரத்து செய்யப்பட்டது.