மதுரை ஆவினில் தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்தது அம்பலம்..!
மதுரை ஆவினில் தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
மதுரை ஆவின் நிறுவனத்தில் திருப்பதிக்கு லட்டு தயாரிக்க நெய் அனுப்பியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரண்டு நாட்களாக ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், நிர்வாக இயக்குனர் சுப்பையனின் ஆய்வின்போது தரமற்ற இயந்திரங்கள், கருவிகள் வாங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மதுரை ஆவினில் 2019-2020ல் ரூ.30 கோடிக்கு தரமற்ற இயந்திரங்கள் வாங்கி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. கொரோனா காலத்தில் தணிக்கை நடக்காததை சாதகமாக்கி ரூ.30 கோடி வைப்புத்தொகையை வீணடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆவின் நிறுவனம் மாதம் ஒன்றிற்கு ரூ.30 லட்சம் மின்கட்டணமாக செலுத்தி வந்த நிலையில், இதனை குறைப்பதற்காக மதுரை கப்பலூரில், ரூ.13 கோடிக்கு தொடங்கப்பட்ட சோலார் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்கப்படவில்லை என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
மேலும், இந்த மோசடி நடந்த 2019-2020-ல் பணியில் இருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்புள்ளதா என்றும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.