சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு… அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

ADMK

கடந்த ஆண்டு ஜூலை 11-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில்,  அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இதுபோன்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என பல்வேறு தீர்மானங்கள் இபிஎஸ்   தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனிடையே, இதன்பின் தேர்தல் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், அதிமுகவில் இருந்து தாங்கள் நீக்கப்பட்டதை எதிர்த்தும், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரியும் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இவ்வழக்கின் விசாரணை 7 நாட்கள் நடைபெற்ற பின்னர் இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

பின்னர் இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று ஓபிஎஸ் உள்ளிட்டோர் 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது  தீர்ப்பளிக்க உள்ளதாக கூறப்பட்டது.  அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து இரு நீதிபதிகள் அமர்வு அதிரடியான தீர்ப்பை வழங்கி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் நீதிபதிகள் கூறுகையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பினை அடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் (இபிஎஸ் ஆதரவாளர்கள்) பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும்,  இனிப்புகள் வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் , அதிமுக என்பது ஒன்றுதான், அதிமுக பலமாகவே உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கும் தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தீர்ப்பு பற்றி கூறுகையில், எங்களது சட்டப்போராட்டம் தொடரும் என குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்