விகடன் இணையதள தடை நீக்கம்! ஆனால்.? சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!
கார்ட்டூன் விவகாரம் தொடர்பாக விகடன் இணையதள முடக்கத்தை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பும் முயற்சியில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக சென்றவர்களை திருப்பி அனுப்பும் போது அவர்களின் கை, கால்களில் விலங்கிட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இச்சம்பவத்திற்கு பிறகு அமெரிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இந்த விவகாரம் பற்றி அதிகாரபூர்வமாக விவாதிக்கவில்லை.
இதனை குறிப்பிட்டு, விகடன் இணையதள பக்கத்தில் பிரதமர் மோடி போல ஒரு கார்ட்டூன் சித்திரம் வரைந்து அதில் அவரது கை கால்களில் விலங்கிட்டு டிரம்ப் அருகே அமர்ந்து இருப்பதுபோல காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஒரு நாட்டின் பிரதமரை கேலி சித்திரம் போல வரைந்து நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவித்ததாக மத்திய அரசு சார்பில் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது. விகடன் இணையதளம் முடக்கப்பட்டது கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிகழ்வு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த முடக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் குழுமம் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில், விகடன் தரப்பில், இணையதள பக்கம் முடக்கம் என்பது ஊடக சுதந்திரம், பேச்சுரிமை, கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லை என்றும் தற்போதுள்ள தடை நீக்க உத்தரவை நீக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் வாதிடுகையில், இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்து தான் என குறிப்பிட்டு தடையை நீக்க உத்தரவிடக்கூடாது என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விகடன் இணையதள பக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என கூறியும், அதேநேரம், அந்த குறிப்பிட்ட கார்ட்டூன் சித்திரத்தை இணையதள பக்கத்தில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்றும் கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.