மகா விஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.!
முன்ஜென்மம், பாவ புண்ணியங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது செய்யப்பட்ட மகா விஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை : பாம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர். அப்போது அறிவியல் சார்ந்து அல்லாத மூடநம்பிக்கை, முன் ஜென்மம் பற்றி பேசினார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் குறித்தும் விமர்சனம் செய்திருந்தார் மகா விஷ்ணு.
பள்ளிகளில் மூடநம்பிக்கை குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியது, மாற்று திறனாளி ஆசிரியரை விமர்சனம் செய்தது உள்ளிட்ட புகாரின் பெயரில் கடந்த மதம் 7ஆம் தேதி மகா விஷ்ணுவை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள மகா விஷ்ணு, இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்திருத்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இந்த வழக்கு விசாரணையின் போது, ” தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. தான் பேசிய முழு வீடீயோவையும் பார்த்தால் உண்மை தெரியும். தான் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். காவல்துறையினர் நான் பேசிய வீடியோ ஆதாரங்கள் , வங்கி கணக்கு விவரங்களை பறிமுதல் செய்துள்ளனர். தான் பேசியது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ” என மகா விஷ்ணு தரப்பு கூறியது.
இதனை அடுத்து வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மகா விஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.