‘அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு’ ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.!
அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டார். இந்நிலையில், இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் உரையாற்றிய போது, இன்று முதல் மக்களுடன் நேரடி தொடர்பில் களத்தில் இருக்கப் போகும் நீங்கள். அரசின் முத்திரை திட்டங்கள். அன்றாடம் செயல்படுத்தும் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள்.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், மக்கள் குறை தீர்ப்பு முகாம் மனுக்கள் மீதும். முதல்வரின் முகவரி மனுக்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு, அவர்களின் குறைகளை அங்கேயே தீர்த்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும்” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.