சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் பெய்த கனமழையின் போது வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தின் போது சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன வளாகத்திலிருந்து எண்ணூர் முகத்துவார பகுதியில் வெள்ள நீரோடு எண்ணெய்யும் சேர்ந்து கசிந்து வந்தது.
இதனால் காட்டுக்குப்பம், சிவன்படை குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி.நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ” எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும், மேலும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் ஒப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம், மொத்தம் 5 கோடியே 2 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும். இந்நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, மிக்ஜாம் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு 8 கோடியே 68 இலட்சம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.