சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர் ஜான் மார்ஷல் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ” திராவிட மாடல் என்பது ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு இனத்தின் அரசு. 2021 ஆட்சிக்கு வந்ததும் திராவிட மாடல் அரசு என்று பெயர் சூட்டினோம். எனவே, திராவிட மாடல் அரசுக்கு ஜான் மார்ஷலுக்கு சிலை அமைக்கும் பெருமை கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 1948ஆம் ஆண்டிலேயே சிந்துவெளி அடையாளங்களை வெளிகொண்டு வந்தவர் அண்ணா.
செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி நாகரிகத்தை அடையாளப்படுத்தியவர் கருணாநிதி என்பதை தெரிவித்து கொள்கிறேன். அதைப்போல, சிந்துவெளியில் காணப்பட்ட காளைகள் திராவிடத்தின் சின்னம் சிந்து சமவெளி நாகரிகம் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் உள்ளது” என பெருமையாக பேசினார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின் ” ஆரியமும் சமஸ்கிருதமும்தான் இந்தியாவின் மூலம் என்ற கற்பனையை வரலாறாக சொல்லி வந்தனர். அதை மாற்றியது சிந்துவெளி நாகரிகம் குறித்த ஜான் மார்ஷலின் ஆய்வுகள்தான். சிந்துவெளி நாகரிகம் ஆரியத்திற்கு முற்பட்டது, அங்கே பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என அவர் நூற்றாண்டுக்கு முன் சொன்னது இன்று வலுப்பெற்றுள்ளது.
இந்திய துணை கண்ட வரலாற்றில் நமக்கான அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும். கீழடி குறியீடுகளும், சிந்துவெளி குறியீடுகளும் 60% ஒத்துப்போகின்றன சிந்துவெளி காலமும், தமிழ்நாட்டின் இரும்புக்காலமும் சமகாலத்தவை. சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும். அதைப்போல, கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.