நீலகிரி : மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு-1 கிராமம், மழவன் சேரம்பாடி என்ற இடத்தில் கடந்த 15-ஆம் தேதி மாலை கூடலூர்-அய்யன்கொல்லியில் 20 பயணிகளுடன் பயணம் செய்த ‘TN-43-N-0779’ என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்து மழவன் சேரம்பாடி பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், மின்கம்பி அறுந்து விழுந்ததில், மேற்படி பேருந்து நாகராஜ் (வயது 49) மற்றும் பேருந்தில் பயணம் செய்த சேரங்கோடு-1 கிராமம், பூஞ்சக்கொல்லி பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலையும், நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்ஜிஆர் – பிரதமர் மோடி!
இது குறித்து வெளியான அறிக்கையில் ” பேருந்து விபத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.நாகராஜ் மற்றும் பாலாஜி ஆகிய இருவரையும் இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
அவர்கள் உயிரிழந்ததற்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.