அடுத்த மாதம் மதுரையில் ஆலோசனை , அவர்கள் விரும்பினால் கட்சி ஆரம்பிப்பேன் – மு.க.அழகிரி பேட்டி
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ,ஜனவரி மாதம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இதற்கு இடையில் தனிக்கட்சி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியது.ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மு.க.அழகிரி பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் ,கலைஞர் பெயரில் இந்த அமைப்பு அல்லது கட்சி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது.ஆனால் மு.க.அழகிரி தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து அறிய கோபாலபுரம் இல்லத்திற்கு மு.க.அழகரி சென்றார்.இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,தேர்தலில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.ஜனவரி 3-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் ஆதரவாளர்கள் விரும்பினால் கட்சி ஆரம்பிப்பேன். ஆலோசனைக்கு பிறகு கட்சி தொடங்குவது பற்றி முடிவு செய்யப்படும்.திமுகவில் இருந்து அழைப்பு வரவில்லை.அழைப்பு வந்தாலும் செல்ல மாட்டேன்.ரஜினி வந்தவுடன் ரஜினியை நான் சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.