கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! மீண்டும் சென்னையில் வெயில்!
சென்னை மற்றும் ஆந்திராவிற்கு இடையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. இதனால், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு நேற்று தீவிரமாக மேற்கொண்டது.
இதனால், சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து தெற்கு ஆந்திராவை நோக்கி தாழ்வு மண்டலம் நகர்ந்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் படிப்படியாக நேற்று காலை முதல் மழை குறைந்தது. இதன் காரணமாகவே, நேற்று இரவு சென்னை மற்றும் 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட்டை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றது .
இந்த நிலையில், இன்று அதிகாலை மேற்கு வடமேற்கு திசையில் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே இன்று அதிகாலை 4.30 மணியளவில் நிலைபெற்றுக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழகத்தின் மேல் தற்போது நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், 2 நாட்களுக்கு பிறகு இன்று சென்னையில் மீண்டும் வெயில் அடித்து வருகிறது, இதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.