அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி…தீவிரமடையபோகும் பருவமழை!
5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம்பர் 17-ம் தேதி துவங்கி 21-ம் தேதி வரை மீண்டும் மழை தீவிரமடையக்கூடும் என டெல்டா வேதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை : வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24-மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு – வட மேற்கு திசையில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதன் காரணமாக மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று வரை பெய்த கனமழை இன்று குறைந்துள்ளது.
இந்த சூழலில், டெல்டா வேதர்மேன் ஏற்கனவே, 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம்பர் 17-ம் தேதி துவங்கி 21-ம் தேதி வரை மீண்டும் மழை தீவிரமடையக்கூடும் என தகவலை தெரிவித்தும் இருந்தார். அதேபோல, வரும் டிசம்பர் 14-ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.