மக்களவைத் தேர்தல் : இறுதி கட்டத்தை எட்டியது அதிமுக – தேமுதிக பேச்சுவார்த்தை!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக எப்போதும்போல் வலுவான கூட்டணியுடன் மக்களவை தேர்தலை சந்திக்கிறது. மறுபக்கம் பாஜக – அதிமுக கூட்டணி விரிசலுக்கு பிறகு இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்க ஆயுதமாகி வருகிறது. இதில், பாஜக – ஓபிஎஸ் – டிடிவி தினகரன் கைகோர்க்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை கூட்டம்..!
ஆனால், அதிமுகவின் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதிமுகவை பொறுத்தவரை பாமக, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அதிமுக – பாமக – தேதிமுக இடையே கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தேமுதிக மற்றும் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுவது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.