நாடாளுமன்ற தேர்தல்: திமுக – மார்க்சிஸ்ட் இடையே 2-ஆம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் இரு கட்சிகளும் ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சம்பத் தலைமையிலான குழுவினர், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் நிறைவடைந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை குழு தலைவர் சம்பத், “பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் அமைந்தது, இரண்டு தரப்பும் மனம் திறந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். திமுகவுடன் எந்தவிதமான நெருடலும் இல்லை, தொகுதி பங்கீடு தொடர்பாக கூடிய விரைவில் முடிவு எட்டப்படும்.
Read More – நாடாளுமன்ற தேர்தல்! திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், கொமதேக கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு: வேட்பாளரும் அறிவிப்பு
3-ம் கட்ட பேச்சுவார்த்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார். இதனிடையில் தமிழகத்தில் 3 நாடாளுமன்ற தொகுதிகளை திமுகவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 3 தொகுதிகளுக்கு பதில் கடந்த முறை போலவே 2 இடங்களை மட்டுமே ஒதுக்க திமுக விரும்புவதாக தெரிகிறது. முன்னதாக திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.