மக்களவைத் தேர்தல் தோல்வி.! இபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை.!
சென்னை: மக்களவை தேர்தல் தோல்வி குறித்து இன்று முதல் வரும் ஜூலை 16ஆம் தேதி வரையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கட்சி இதுவரையில் சந்தித்த தேர்தல்களில் பெரும்பாலும் தோல்வியயே தழுவி வருகிறது. 2019 மக்களவை தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற அதிமுக இந்த முறை 2024 தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. சில இடங்களில் 3ஆம் இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது.
இதற்கிடையில், 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தாலும் சட்டப்பேரவை எதிர்க்கட்சியாக தனது நிலையை உறுதி செய்தது அதிமுக. ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் விலகல் , 2024 மக்களவை தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி சுமார் 20 சதவீதம் அளவுக்கு சரிந்தது என அதிமுகவின் நிலை கட்சியினருக்கே சற்று கவலையை அளித்துள்ளது.
இந்நிலையில் தான் மக்களவை தேர்தல் தோல்வி குறித்து முக்கிய ஆலோசனையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார். இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் வரும் ஜூலை 16ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நாடாளுமன்ற தொகுதிகளின் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பதூர் ஆகிய தொகுதிகளின் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்றும், மக்களவை தேர்தல் குறித்து முக்கிய விவகாரங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.