லாக்கப் மரணம் – முதலமைச்சருக்கு சிபிஎம் மாநில செயலாளர் கடிதம்!
லாக்கப் மரணத்தில் குற்றம் சுமத்தப்பட்ட காவலர்களை கைது செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு சிபிஎம் கடிதம்.
சிபிஎம் வலியுறுத்தல்:
நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் லாக்கப் படுகொலை தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் லாக்கப் படுகொலையை நிகழ்த்திய காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
படுகொலை:
2015ம் ஆண்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணியன் காவலர்களால் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். காவலர்கள் தொடர்ந்து பணியில் இருப்பது வழக்கின் சாட்சியங்களை அழிப்பதற்கு வாய்ப்பளிக்கும். எனவே, பட்டாம்பாக்கம் சுப்பிரமணி லாக்கப் மரணத்தில் குற்றம் சுமத்தப்பட்ட காவலர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டம்:
கடந்த 29.02.2015 அன்று நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் கடலூர் மாவட்டம், பி.என்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட போலீஸாரால் சித்ரவதை செய்து அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதன்பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களின் போராட்டத்தின் விளைவாக சந்தேக மரணம் என இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 174 என வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றவாளிகள்:
பின்னரே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி விசாரணையின் இறுதியில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராஜா, எஸ்.ஐ செந்தில்வேல், காவலர் சௌமியன் மூன்று பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு, இது கொலையாகாத மரணம் என வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக லாக்கப் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
லாக்கப் மரணம்:
22.08.2022 அன்று குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு எஸ்.ஐ செந்தில்வேல், காவலர் சௌமியன் மீது கொலை மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவுகளை மாற்றம் செய்து கடலூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், தற்போது நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் லாக்கப் படுகொலையை நிகழ்த்திய காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதலமைச்சர் முகாஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.